போட்டி தேர்வுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் படிக்க வேண்டும்


போட்டி தேர்வுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் படிக்க வேண்டும்
x

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் படிக்க வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆலோசனை வழங்கினார்.

திருப்பத்தூர்

6 மணிநேரம் படிக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு பயிற்சி பெறும் மற்றும் மத்திய அரசு தேர்வுக்கு பயிற்சி பெறுபவர்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா சந்தித்து, அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் 6 மணி நேரம் வரை படிக்க வேண்டும். மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாங்கள் படித்த பாடத்தை விவாதித்து படிக்க வேண்டும். தங்களுக்கு தெரிந்த தகவலை மற்றவர்களுக்கு கூறி தகவல் பரிமாற்றம் செய்து படிக்கலாம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள்

இந்திய ஆட்சிப்பணியில் தேர்ச்சியடைபவர்களில் அதிகமானோர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அனைவரும் நல்லமுறையில் படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 ஆகிய தேர்வில் வெற்றிபெற்று உயர் அதிகாரிகளாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 5 இளைஞர்களுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின்ன் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story