பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆய்வு
பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக ஆய்வு நடந்தது.
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு "காலை உணவு வழங்கும் திட்டம்" மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான வருகிற 15-ந் தேதியன்று தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட உள்ளது. அதன்படி அன்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரம்பலூர் கிழக்கு, பெரம்பலூர் மேற்கு, முத்துநகர் ஆகிய 3 தொடக்க பள்ளிகளில் 112 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட சின்னவளையம், மணக்கரை, மலங்கன் குடியிருப்பு, ஜெயங்கொண்டம் (தெற்கு, வடக்கு), கீழக்குடியிருப்பு, கொம்மேடு, செங்குந்தபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஜெயங்கொண்டம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 464 மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது. அதற்கு தேவையான நவீன வசதிகளுடன் கூடிய சமையலறை கட்டும் பணி பெரம்பலூர் மாவட்டத்துக்கு முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திலும், அரியலூர் மாவட்டத்துக்கு மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்த சோதனை ஓட்டத்தை அந்தந்த கலெக்டர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நவீன சமையல் கூடத்தில், 3 பள்ளிகளுக்கான உணவுகள் தயாரிக்கப்பட்டு எடுத்து செல்லப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா சாப்பிட்டு பார்த்து சோதனை செய்தார். இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை உணவு தயாரிக்கும் பணியினையும், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட காலை உணவினை சாப்பிட்டு பார்த்தும் சோதனை செய்தார்.