காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு


காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் ஆய்வு
x

காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பட்டமங்கலம் நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் இயக்குனருமான அமுதவள்ளி, மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்றும் உணவு பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மயிலாடுதுறை நகராட்சி கூறைநாடு சின்னஎரகலி தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள் கல்வி கற்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடி சிறப்பாக பதில் அளித்த மாணவர்களை பாராட்டினார்.

அங்கன்வாடி மையம்

மேலும், சின்னஎரகலிதெரு நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடி, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, நகரசபை தலைவர் செல்வராஜ், நகராட்சி பொறியாளர் சணல்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பார்த்தசாரதி, மயிலாடுதுறை குழந்தை வளர்ச்சி அலுவலர் கிருத்திகா ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு ஆஸ்பத்திரி

இதேபோல தரங்கம்பாடி மற்றும் பொறையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையத்தை பார்வையிட்டு, கோப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் பொறையாறு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து அங்குள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு சென்று அங்குள்ள அருங்காட்சியகத்தையும், கோட்டையையும் சுற்றி பார்த்தார்.

மேலும், பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் பையை வழங்கினார். அப்போது தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செயல் அலுவலர் பூபதி கமலகண்ணன், தரங்கம்பாடி தாசில்தார் புனிதா ஆகியோர் உடன் இருந்தனர்


Next Story