தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஆய்வு: குழந்தைகளுடன் காலை உணவு சாப்பிட்ட போலீஸ் சூப்பிரண்டு
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட. போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் வருகிற 14-ந் தேதி வரை ஆய்வு மேற்கொள்கின்றனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி 2-ம் கேட் அருகே உள்ள மேலூர் மாநகராட்சி பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் காலை உணவு திட்டத்தை நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குழந்தைகளிடம் காலை உணவு எப்படி உள்ளது? என்று கேட்டறிந்தார். ஆசிரியரிடம் உணவு தயாரிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு வழங்கும் உணவை மிகுந்த கவனத்துடன் கொடுக்க வேண்டும், உணவை நீங்கள் முதலில் சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, அவர் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.