கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் விழாவாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவ்விழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டிற்கான தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது.

27-ந் தேதி 3-ம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. டிசம்பர் மாதம் 3-ந் தேதி பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டம் நடக்கிறது.

6-ந் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள உள்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

40 லட்சம் பக்தர்கள்

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு முழு தளர்வுகளுடன் தீபத் திருவிழாவிற்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே அனைத்து துறை அலுவலர்களும் தீபத் திருவிழாவில் முழு கவனத்துடன் பணியாற்ற வேண்டும். திருவண்ணாமலையில் மின் இணைப்பு தடை இல்லாமல் வழங்க வேண்டும்.

கோவில் மற்றும் நகர் பகுதிகளில் மின் கேபிள்கள் முறையாக பராமரிக்க வேண்டும். திருவிழா நாட்களில் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு பஸ்கள்

தீபத் திருவிழாவை முன்னிட்டு 12 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிக்க திருவண்ணாமலை நகராட்சி மட்டுமின்றி மற்ற நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் வெளியிடும் போது இணையதளம் முடங்காமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு வசதியாக சுமார் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மஞ்சப்பை தர வேண்டும்

மேலும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வரை ஆட்டோவில் வரக்கூடிய பக்தர்களுக்கு கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்.

விழாவின் 7-ம் நாளில் பஞ்ச மூர்த்திகள் வலம் வரும் 5 மரத்தேர்கள் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இயக்கப்படாததால் மரதேர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்க வேண்டும்.

புதிதாக தயார் செய்யப்பட்டு வரும் முருகர் தேரை விரைவில் வெள்ளோட்டம் பார்க்க வேண்டும்.

விழாவிற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வரக்கூடிய பவுர்ணமி நாளில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து பணிகளை மேற்கொண்டு தீபத் திருவிழாவின்போது தயாராக இருக்க வேண்டும்.

கார்த்திகை தீபத்தின் போது மலையின் மீது கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் 2 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி அளிக்கப்படும். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு வரும் பக்தர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக மஞ்சப்பை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story