கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்


கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

கள்ளச்சாராயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 15-க்கும் ேமற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாராய வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கலால், வருவாய்த்துறையினரும் போலி மது விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை தடை செய்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

உரிய நடவடிக்கை

கூட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவும் நபர்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டது.

காவல்துறை அடிக்கடி சோதனையில் ஈடுபட வேண்டும். சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் சாராயம் விற்பது மற்றும் காய்ச்சுவது போதை பொருட்கள் பதுக்கல் தொடர்பான நடவடிக்கைகள், போலியான மதுபானங்கள் விற்பனை மற்றும் ஆயத்தீர்வை துறை கீழ் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகிய நேர்வுகளில் சட்டத்துக்கு புறம்பான விதி மீறல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

விழிப்புணர்வு

சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலியான மது வகைகள் விற்பனை ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் விற்று தற்போது மனம் திருந்தி வாழ்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவியும், இலவசமாக ஆடு, மாடு அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் (பயிற்சி) ராஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலமுருகன், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story