திருச்ெசந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
திருச்ெசந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆய்வு மேற்கொண்டார்.
கந்தசஷ்டி திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா செவ்வாய்க்கிழமை காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. மறுநாள் திருக்கல்யாணமும் நடக்கிறது. இந்த 2 நாட்களிலும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதில் பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வர். எனவே திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.
ஆணையர் ஆய்வு
இந்த ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள நேற்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் திருச்செந்தூர் வருகை தந்தார். பின்னர் அவரும், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூவும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகள், குடிநீர் வசதி, கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம், மருத்துவ சிகிச்சை வசதி போன்றவற்றை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள பல இடங்களையும் அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்களிடமும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களிடமும் அடிப்படை தேவைகள் குறித்தும் ஆணையர் கேட்டறிந்தார். பக்தர்கள் வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டார். பக்தர்களுக்கு எவ்வித வசதி குறைபாடும் ஏற்படாதவாறு கவனமாக பணியாற்றுமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, இந்து சமய அறநிலையத் துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி, திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.