திகைத்து நின்ற மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள்
திடீெரன பாதை அடைக்கப்பட்டதால் மாணவர்கள் திகைத்து நின்றனர்.
தாயில்பட்டி,
சாத்தூரை அடுத்த படந்தால் அருகே நத்தத்துப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 12 ஆசிரிய, ஆசிரியைகள், பணியாற்றி வருகின்றனர். கிராமத்தின் மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ. தூரம் தள்ளி உள்ள நிலையில் இந்த பள்ளிக்கு பொதுபாதை இல்லை என கூறப்படுகிறது. பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நிலத்தின் வழியாக அனைவரும் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ேகாடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். அப்போது பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள அந்த நிலத்தில் முட்களை வெட்டிப்போட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த வழியாக வந்த பள்ளி ஆசிரியர்களும் வழி இல்லாததால் திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் நிலத்தின் உரிமையாளரிடம் பேசி தற்காலிகமாக நடைபாதை அமைத்து தரும்படி கூறினர். இதையடுத்து முள்செடிகள் அகற்றப்பட்டு, பின்னர் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளிக்கு சென்றனர். அதே நேரத்தில் பள்ளிக்கு செல்ல நிரந்தர பாதை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.