பாறைக்குழி தண்ணீரில் சைக்கிளுடன் தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி
பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் சைக்கிளுடன் தவறி விழுந்த மாணவன் இறந்தான். அவனுடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பள்ளி மாணவன்
பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரம் அரிவரதன் நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் கவுதம்(வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று விளையாட்டு மைதானம் சென்று விட்டு வருவதாக, பெற்றோரிடம் கூறிவிட்டு சைக்கிளில் சென்றவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
மகனை காணாத பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது சுக்கம்பாளையம் பாறைக்குழி பகுதியில் சைக்கிளில் சென்ற சிறுவன் ஒருவன் தவறி பாறைக்குழி தண்ணீரில் விழுந்ததாக, அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பதறிப்போன பெற்றோர் பல்லடம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே பல்லடம் போலீசார் மற்றும் பல்லடம்தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் பாறைக்குழி தண்ணீரில் இறங்கி மாணவனை தேடினர். சுமார் 2 மணி நேர தேடலுக்குப்பிறகு கவுதம் ஓட்டிச்சென்ற சைக்கிள் மட்டும் கிடைத்தது. ஆனால் கவுதமை காணவில்லை. தொடர்ந்து அந்தப்பகுதியில் மழை பெய்ததாலும், இரவு நேரம் ஆகிவிட்டதாலும், போதிய வெளிச்சம்இல்லாததாலும், மாணவனை தேடும் பணி நிறுத்தப்பட்டது.
உடல் மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது.தீயணைப்பு படை வீரர்கள் கயிறு கட்டி பாறைக்குழியில் இறங்கி தேடினர். இதில் மாணவன் கவுதம் உடல்சேற்றில் கிக்கியவாறு கிடந்தது. அந்த உடலை மீட்டு மேலே ெகாண்டு வந்தனர். பின்னர் கவுதம் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். விளையாட சைக்கிளில் சென்ற மாணவன், பாறைக்குழி தண்ணீரில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.