1,783 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தில் 1,783 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான திட்டத்தை கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார்.
உயர்கல்வி உறுதி திட்டம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வி சேவையை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. ஏற்கனவே மற்ற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலமாக கூடுதலாக உதவி பெறலாம்.
பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதன் மூலமாக குழந்தை திருமணத்தை தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவவும், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்கவும், பெண் குழந்தைகளின் விருப்பப்படி மேற்படிப்பு படிக்க ஊக்குவிக்கவும், பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெருக்குதல், சமூக பாதுகாப்பை உறுதி செய்யவும், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 40 கல்லூரிகளில் 3 ஆயிரத்து 257 மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெற்றனர். வருடத்துக்கு ரூ.3 கோடியே 90 லட்சத்து 84 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
2-ம் கட்டமாக இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
வேலைவாய்ப்பு திருவிழா
கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்த திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாணவிகள் தாங்களே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பதில் பிரச்சினைகள் இருந்தால் அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். வேறு உதவித்தொகை பெற்றாலும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்ட உதவித்தொகை பெறலாம்.
திருப்பூரில் வருகிற 11-ந் தேதி வேலைவாய்ப்பு திருவிழா நடக்கிறது. 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு முகாமை பார்வையிடும்போது எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதை அறியமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
1,783 மாணவிகளுக்கு உதவித்தொகை
பின்னர் 2-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 49 கல்லூரிகளில் 1,783 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்டது. பின்னர் அவரவர் வங்கிக்கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டது. வருடத்துக்கு ரூ.2 கோடியே 13 லட்சத்து 96 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர் கோவிந்தராஜ், கல்விக்குழு தலைவர் திவாகரன், மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.