சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு இன்று நடக்கிறது.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு இன்று நடக்கிறது.
ஆயுதப்படை மைதானம்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் மற்றும் உடல்தகுதி தேர்வு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. மேலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 525 பேருக்கு உடல்தகுதி தேர்வு நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
அதில் தேர்வில் கலந்து கொள்பவர்கள் அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு½ மணி நேரத்திற்கு முன்னரே மைதானத்திற்கு வந்து அறிக்கை செய்யலாம். மேலும் சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட அழைப்பாணை, அனைத்து அசல் சான்றிதழ்கள், அசல் சான்றிதழ்களின் 2 நகல்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அசல் உண்மைச்சான்றிதழ், கூடுதல் சான்றிதழ்கள் இருப்பின் அதன் அசலினையும், 2 நகல்களையும் கொண்டு வரவேண்டும்.
இந்த தேர்வு 2 கட்டமாக தேர்வு நடைபெறும். அதில் முதல் கட்டமாக இன்று (23-ந் தேதி) சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் மற்றும் மார்பு அளவு அளத்தல், 1500 மீ. ஓட்டம் ஆகியவை நடத்தப்படும். 2-ம் கட்டமாக நாளை (24-ந் தேதி) அன்று அழைப்பாணை சரிபார்ப்பு, கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் (அல்லது) நீளம் தாண்டுதல், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் நடைபெறும். முன்னாள் படை வீரர்களுக்கு முதல்நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு, 1500 மீ. ஓட்டம் ஆகியவையும், 2-ம்நாளில் அழைப்பாணை சரிபார்ப்பு, குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் (அல்லது) நீளம் தாண்டுதல், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெறும். மைதானத்திற்குள் தேர்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்.
ஒத்திகை
மற்ற உறவினர்கள், நண்பர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மைதானத்திற்குள் செல்போன் கட்டாயமாக கொண்டு வரக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வையொட்டி ஆயுதப்படை மைதானத்தில் அதிகாரிகள், போலீசார் ஆகியோர் நேற்று ஒத்திகை நடத்தி பார்த்தனர்.