திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


திருவள்ளூரில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவள்ளூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் செய்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகர் மாதுளம் பூ தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 78). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மகன் தணிகைவேலு (49). இவர், 1997-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். பின்னர் திருவள்ளூர் தாலுகா போலீசில் ரோந்து பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இதற்கு முன்பு ஆவடியில் போலீசாக பணிபுரிந்து வந்தபோது தீபா (40) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு கணேஷ், ஸ்ரீயாஸ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தணிகைவேலு தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

பின்னர் அவர் தனது மனைவி, பிள்ளைகளுடன் காக்களூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு தணிகைவேலு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட தணிகைவேலுவின் தந்தை செல்வமணி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகன் தணிகைவேலுக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. கடந்த 14-ந்தேதி தனது மகனின் வீட்டிற்கு வந்த சிலர் அவரை தாக்கினர். இதனால் மன உளைச்சலில் இருந்த தனது மகன் தணிகைவேலு 15-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே எனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் திருவள்ளூர் தாலுகா ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story