சோதனை சாவடியில் டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


சோதனை சாவடியில் டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x

சோதனை சாவடியில் லாரி டிரைவரிடம் ரூ.100 லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தென்காசி,

தமிழக-கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளா நோக்கி புறப்பட்டது. புளியரை சோதனை சாவடியில் அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, லாரியில் அதிக பாரம் ஏற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் லாரியை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்று போலீசார் கேட்டதாக கூறப்படுகிறது.

100 ரூபாய்

இதையடுத்து அந்த லாரி டிரைவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சிடம் 100 ரூபாய் கொடுத்தார். இதை வாங்கிய அவர் இந்த தொகை போதாது கூடுதலாக பணம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்சிகள் தொடர்பாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் விசாரணை நடத்தினார்.

பணி இடைநீக்கம்

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்ஸ் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக போலீஸ்காரர்கள் மகாராஜன், காளிராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றியும் அவர் உத்தரவிட்டார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஜேம்சின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.


Next Story