கவரிங் நகை மோசடி வழக்கில் தலைமறைவான சப்-இன்ஸ்பெக்டரின் கள்ளக்காதலி கைது
கவரிங் நகை மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கள்ளக்காதலியை விசாகப்பட்டிணத்தில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காரைக்கால்,
காரைக்காலில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த 10-ந்தேதி கவரிங் நகையை விற்க முயன்ற காரைக்காலை சேர்ந்த பரசுராமன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லாபுரத்தை சேர்ந்த ரிபாத் காமில் (35), பணிநீக்கம் செய்யப்பட்ட புதுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரோம் (38) உள்பட 7 பேரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலி
இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகு கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த மோசடியில் மூளையாக செயல்பட்டது காரைக்காலை சேர்ந்த புவனேஸ்வரி (35) என்பதும், இவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கள்ளக்காதலி என்பதும் தெரியவந்தது. உடலில் அதிகளவு நகைகள் அணிந்து, தன்னை தொழில்அதிபர் என்று பலரிடம் அறிமுகம் செய்து, கவரிங் நகைகளை விற்றுள்ளார். தலைமறைவாக இருந்த புவனேஸ்வரியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
சொகுசு விடுதியில் கைது
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் அவர் தங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விசாகப்பட்டினம் விரைந்து சென்று, நேற்று முன்தினம் இரவு புவனேஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவரை நேற்று காரைக்கால் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
காரைக்கால் பெரியாச்சி கோவில் எதிரே உள்ள சியோ நகரில் உள்ள புவனேஸ்வரி வீட்டில் இருந்து போலி தங்க நகைகளை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடு்ம் தகவல்கள் தெரியவந்தது.
போலி நகைகளை விற்பனை செய்தல், வங்கிகளில் அடகுவைத்தல் வழக்கில் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்ட சில நபர்களுக்கு, புவனேஸ்வரி லட்சக்கணக்கில் கடனாக பணம் வழங்கி உள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களை மூளைச்சலவை செய்து, அவர்கள் மூலம் கவரிங் நகைகளை அடகு வைத்தும், விற்றும் மோசடி செய்து, அதன்மூலம் கிடைத்த பணத்தை அவர்கள் கடனை கழித்துள்ளனர்.
சிறையில் அடைப்பு
விசாரணைக்கு பின் புவனேஸ்வரியை காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
புவனேஸ்வரி எந்தெந்த ஊரில், எத்தனை வங்கிகளில் தனது மோசடி கும்பல் மூலம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்த, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.