முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:மதகுகளை இயக்கி சோதனை


முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:மதகுகளை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து, மதகுகளை இயக்கி சோதனையிட்டனர்.

தேனி

துணை குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு அணையின் நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த துணை கண்காணிப்பு குழுவினர், கடைசியாக கடந்த மே மாதம் 15-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

துணை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான குழுவினர் 3 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில், தமிழக பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில்குமார், உதவி பொறியாளர் அருண் ஆகியோர் பங்கேற்றனர். குழுவின் தலைவர் மற்றும் தமிழக பிரதிநிதிகள் படகு மூலமும், கேரள பிரதிநிதிகள் ஜீப் மூலமும் வல்லக்கடவு பாதை வழியாக அணைக்கு சென்றனர்.

அணையில் ஆய்வு

பின்னர் பிரதான அணை, சுரங்கப்பகுதி, பேபி அணை, மதகு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். அது அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப துல்லியமாக இருந்தது. அணையில் உள்ள மதகுகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். சில மதகுகளை இயக்கி பார்த்தனர். அவை நல்ல முறையில் இயங்கின.

இதையடுத்து அந்த குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடிக்கு திரும்பினர். அதன்பிறகு, குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள், 'ரூல்-கர்வ்' அட்டவணையை பின்பற்றி அணையின் நீர்மட்டத்தை கண்காணித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.


Related Tags :
Next Story