முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:மதகுகளை இயக்கி சோதனை


முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு:மதகுகளை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து, மதகுகளை இயக்கி சோதனையிட்டனர்.

தேனி

துணை குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு அணையின் நிலவரம் குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த துணை கண்காணிப்பு குழுவினர், கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

துணை கண்காணிப்பு குழு தலைவரான மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் தலைமையிலான குழுவினர் 3 மாத இடைவெளிக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் தமிழக பிரதிநிதிகளான முல்லைப்பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தேக்கடியில் இருந்து படகுகள் மூலம் அணைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

மதகுகளை இயக்கி சோதனை

பிரதான அணை, சுரங்கப்பகுதி, பேபி அணை, மதகு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். அது அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப துல்லியமாக இருந்தது. அணையில் உள்ள 13 மதகுகளில், 1, 4, 9 ஆகிய மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். அவை நல்ல முறையில் இயங்கின. பின்னர் அந்த குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடிக்கு திரும்பினர்.

அதன்பிறகு, குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் வல்லக்கடவு பாதை சீரமைப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தனர். இந்த ஆய்வு மற்றும் கூட்டத்தில் நடத்தப்பட்ட விவாதங்கள் குறித்த அறிக்கை கண்காணிப்பு குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.


Next Story