தேனி சார்பதிவாளர் பணியிடை நீக்கம்; ஐகோர்ட்டு உத்தரவுபடி நடவடிக்கை
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி தேனி சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை மோசடியாக விற்பனை செய்வதுடன், சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. அப்போது, "அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட சார்பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு துறை செயலர்களையும் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும்" என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுபடி தேனி சார்பதிவாளர் உஷாராணியை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. சிவன் அருள் நேற்று உத்தரவிட்டார்.