தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டுகோட்டை பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்


தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டுகோட்டை பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேகம்

ஈரோடு

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு கோட்டை பெருமாள் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

கஸ்தூரி அரங்கநாதர்

ஈரோடு கோட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அனைத்து பணிகளும் முடிவடைந்து கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை யாக சாலை பிரவேசம் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு முதல் கால ஹோமமும், மாலை 5 மணிக்கு 2-ம் கால ஹோமமும் நடந்தது.

இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 3-ம் கால ஹோமமும், இரவு 8 மணிக்கு 4-ம் கால ஹோமமும் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு பரிவார யாகசாலை பூஜைகள் நடக்கிறது. பின்னர் காலை 7 மணிக்கு 5-ம் கால பரிவார யாகசாலை பூஜையும், கலசங்கள் புறப்பாடும் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகம்

அதன்பின்னர் காலை 7.30 மணிக்கு பரிவார ஆலய தெய்வங்களுக்கும், கோவில் விமான கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு பரிவார கோவில் தெய்வங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் கஸ்தூரி அரங்கநாத பெருமாள், கமலவல்லி தாயார், மூலவர் விமானம், ராஜகோபுரத்துக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்கள்.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு அரங்க அழகனுக்கும், அழகியார்க்கும் திருக்கல்யாணம் நடந்து, திவ்ய தம்பதிகள் திருவீதி உலா நடக்கிறது.

தேர்தல் நடத்தை...

இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வம் என்கிற பழனியப்பன், மகா கும்பாபிஷேக பணிக்குழு தலைவரும், நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவருமான வி.சண்முகன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (அதாவது நாளை) கும்பாபிஷேகம் நடைபெறும். இதற்கிடையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும்.

சாமி தரிசனம் செய்ய யார் வேண்டும் என்றாலும் வரலாம். அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் செலுத்தப்பட மாட்டாது. அனைவரையும் பக்தர்களாகவே பாவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான தர்மகர்த்தா கோவிந்த ராமானுஜ சின்னஜீயர் சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கயல்விழி, தீபா மெடிக்கல் உரிமையாளர் புருஷோத்தமன், அறங்காவலர் உறுப்பினர்கள் பழனிவேல், தங்கவேலு, ராமச்சந்திரன், பரிமளம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story