தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம்
தாடிக்கொம்பு அருகே, கொட்டித்தீர்த்த கனமழையால் தரைப்பாலம் மூழ்கியது.
தாடிக்கொம்பு அருகே பூஞ்சோலையில் இருந்து இன்னாசிபுரம், மைக்கேல் பாளையம் வழியாக செல்லும் சாலையின் குறுக்கே சந்தனவர்த்தினி ஆறு செல்கிறது. சிக்கையகவுண்டனூர், ஜெருசலேம் நகர், ஆண்டியகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ஆற்றை கடந்து செல்கின்றனர். இதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம், கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்தது. அதன் பிறகு அந்த வழியாக சென்று வந்த அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, தாடிக்கொம்பு வேடசந்தூருக்கு செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆற்றை கடந்து செல்வதற்கு வசதியாக, தற்காலிகமாக அந்த பாலத்தின் அருகே மண்ணால் பாலம் அமைக்கப்பட்டது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. இதனிடையே நேற்று முன்தினம் இரவு தாடிக்கொம்பு மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சந்தனவர்த்தினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்தில் ஒரு பகுதி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. மேலும் பாலத்தின் பெரும்பாலான பகுதி, தண்ணீரில் மூழ்கியது. தற்போது தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர். எனவே கிராம மக்களின் நலன் கருதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.