தேவிபட்டினத்தில் நவக்கிரக கற்கள் கடல் நீரில் மூழ்கின


தேவிபட்டினத்தில் நவக்கிரக கற்கள் கடல் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தால் தேவிபட்டினம் கடலில் உள்ள நவக்கிரக கற்கள் கடல் நீரில் மூழ்கின.

ராமநாதபுரம்

தேவிபட்டினம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றத்தால் தேவிபட்டினம் கடலில் உள்ள நவக்கிரக கற்கள் கடல் நீரில் மூழ்கின.

கடல் சீற்றம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழக கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் மற்றும் கடல் சீற்றமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக பனைக்குளம், ஆற்றங்கரை, தேவிபட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றமாகவே உள்ளது.

இதனிடையே தேவிபட்டினம் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் அதிக சீற்றமாக காணப்பட்டு வருவதால் கடலில் உள்ள நவபாஷான கோவிலின் 9 நவக்கிரக கற்களும் முழுவதும் கடல் நீரால் சூழ்ந்து நவக்கிரக கற்கள் வெளியே தெரியாத அளவிற்கு கடல் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நேற்று நவபாஷான கோவிலில் நவக்கிரக கற்களை தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தர்கள் நடைபாதையில் நின்றபடியே கடல் நீரில் மூழ்கி கிடந்த நவபாஷாண கற்களை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்து தரிசனம் செய்தனர்.

நீரில் மூழ்கிய கற்கள்

கடலுக்குள் அமைந்துள்ள 9 நவக்கிரக கற்களும் முழுவதுமாக கடல் நீரில் மூழ்கியதால் நவக்கிரக கற்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் பக்தர்கள் யாரும் இறங்கி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் தனுஷ்கோடி மற்றும் பாம்பன், மண்டபம் பகுதியிலும் 2-வது நாளாக கடல் சீற்றமாகவே காணப்பட்டது. குறிப்பாக வடக்கு கடல் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் பாம்பன் ரெயில் பாலத்தில் நேற்று அனைத்து ரெயில்களும் மெதுவான வேகத்தில் ஊர்ந்தபடி சென்றன. பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, தொண்டி, பாம்பன், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டு படகு, மற்றும் பைபர் படகுகளும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Next Story