சுப்பிரமணிய பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி
சுப்பிரமணிய பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரிமளம் அருகே ராயவரம் கிராமத்தில் சுப்பிரமணிய பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பயின்ற 40-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரியில் ஒன்று சேர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் 25-வது ஆண்டை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு பாடம் கற்பித்து கொடுத்த 7 ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயங்களை வழங்கி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். தற்போது கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள். மேலும் தற்போது படிக்கும் மாணவர்கள் இடையே தாங்கள் படித்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தற்போது படித்து வரும் 270 மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்கள் பயிற்சி பெற தங்களுடைய நிறுவனங்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னாள் மாணவர்கள் கல்லூரியுடன் செய்து கொண்டனர். நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் மாணவர்கள் காணொலி காட்சி மூலம் தங்களுடைய பழைய நண்பர்களை சந்தித்து கலந்துரையாடினார்கள். முன்னாள் மாணவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும், சிங்கப்பூர், பங்களாதேஷ் ஈராக், மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் பல்வேறு அரசு, தனியார் பணிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.