சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
பிரம்மகுண்டம் சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய யாகவாசனம், மகா கணபதி ஹோமம், நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு முதலாம் காலபூஜை, பூர்வாங்க பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரங்களும் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு 2-வது கால பூஜை தொடங்கியது. இதையடுத்து வேதபாராயணம், கோ பூஜை, திம்ம சுத்தி, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானை, சுப்பிரமணியர், மாரியம்மன், கெங்கையம்மன் ஆகிய கோவில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரம்மகுண்டம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில்நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.