விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்
கீரைசாத்து ஊராட்சியில் விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர் வழங்கப்பட்டது.
காட்பாடி தாலுகா பொன்னையை அடுத்த கீரைசாத்து ஊராட்சியில் மிளகாய்குப்பம் கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நில மேம்பாட்டு கருவிகளின் வாடகை விவரம், விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்யும் முறை, சோலார் பம்ப் மற்றும் மின் மோட்டார் உபயோகப்படுத்தும் முறை, மதிப்பு கூட்டு எந்திரங்களின் மானிய விவரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காட்பாடி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் ரவி, இளநிலை பொறியியலாளர் பரணிதரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் பவர் டில்லர் உபயோகிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் மானியத்தில் பவர் டில்லர் வழங்கப்பட்டது. கீரைசாத்து ஊராட்சி மிளகாய்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.