மானியம் பெற்று மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்- கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைத்து விவசாய குழுக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்
தூத்துக்குடி:
மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைத்து விவசாய குழுக்கள் பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எந்திர சேவை மையம்
தமிழக அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள், மானியத்தில் அமைக்கும் திட்டத்தினை 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒரு மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையம் ரூ.5 லட்சம் மானியத்தில் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது.
விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக் கூட்டி, அதிக விலைக்கு விற்று லாபம் பெறுவதற்கு, மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள், விவசாய குழுக்கள் அல்லது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம் அமைக்கப்படுகின்றன.
மானியத்துடன்....
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், தானியம் அரைக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரவை எந்திரம், நெல் உமி நீக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து கடலை பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம்பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் எந்திரம், பாக்கு உடைக்கும் எந்திரம் மற்றும் சூரிய கூடார உலர்த்திகள் போன்றவை மானியத்துடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படுகிறது.
இணையதளம்
இதில் விவசாயக் குழுக்கள் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்து கொள்ளலாம். மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயக் குழுக்களுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
மானிய விலையில் மதிப்புக் கூட்டும் எந்திர சேவை மையங்கள் அமைக்க விருப்பமுள்ள விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கோவில்பட்டி உதவி செயற் பொறியாளார், வேளாண்மை பொறியியல் துறை, 27 எச்.எட்டயபுரம் ரோடு பிரதான சாலை, கனரா வங்கி பின்புறம், கோவில்பட்டி (கைபேசி எண்: 94432 76371), அலுவலகம் அல்லது மாவட்ட அளவில் செயற்பொறியாளர். வேளாண்மை பொறியியல் துறை, தூத்துக்குடி (கைபேசி எண்: 94431 72665) அலுவலகத்தையும் அணுகலாம். மேலும் விவரங்களை mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.