தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க மானியம்


தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க மானியம்
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 5:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிமாவட்டத்தில் விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கிணறுகளுக்கும் புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க தமிழக அரசு அறிவித்தபடி 2022-23-ம் நிதியாண்டில் "மானியத்தில் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வழங்குதல்" திட்டத்தின் கீழ் மொத்தம் 220 மோட்டார்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.33 லட்சம் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில், ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ளபழைய திறனற்ற மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள் மற்றும் புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு, குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம், இதில் எது குறைவோ, அது பின்னேற்பு மானியமாக விவசாயியின் வங்கி கணக்குக்கு வழங்கப்படும். வேளாண் பொறியியல்துறை தலைமைப் பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மின் மோட்டார் பம்பு செட்டு வாங்க வேண்டும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் சொட்டுநீர் பாசனத்துக்கும், துணைநீர் மேலாண்மைத் திட்டம், மின்மோட்டாருக்கும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பதிவு செய்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள் தூத்துக்குடி உபகோட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளரையும் (9655708447), கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், புதூர் மற்றும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் கோவில்பட்டி உபகோட்ட உதவிசெயற் பொறியாளரையும் (9443276371), ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டார விவசாயிகள்; திருச்செந்தூர் உபகோட்ட உதவிசெயற் பொறியாளரையும் (8778426945) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story