படகுடன் உபகரணங்கள் வாங்க 60 சதவீதம் மானியம்- கலெக்டர் அருண் தம்புராஜ்


படகுடன் உபகரணங்கள் வாங்க 60 சதவீதம் மானியம்- கலெக்டர் அருண் தம்புராஜ்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:30 AM IST (Updated: 22 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டம் மீனவர்கள் படகுடன் உபகரணங்கள் வாங்க 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் மீனவர்கள் படகுடன் உபகரணங்கள் வாங்க 60 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியம்

நாகை மாவட்டத்தில் மீனவர்களுக்கு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய மீனவர்களின் மர கட்டுமரத்திற்கு மாற்றாக 10 மீட்டர் நீளத்திற்குட்பட்ட பைபர் படகு, எந்திரம், வலை மற்றும் குளிர்காப்பு பெட்டிகள் வழங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பொது பிரிவினருக்கு 40 சதவீதம் என ரூ.2 லட்சம் வரையிலும், மீனவ பெண்களுக்கு 60 சதவீதம் என ரூ.3 லட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவில் 20 பேருக்கும், மகளிர் 5 பேருக்கும் என மொத்தம் 25 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது.

விசைப்படகு

அதேபோல ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பொது பிரிவில் 3 பேர், பெண்கள் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அந்த வழியே பயணம் செய்யும் சரக்கு கப்பல்கள் மற்றும் இதர கலன்களை தானாக அறிந்துகொள்வதற்கு மீன்பிடி விசைப்படகுகளில் தானியங்கி கடற்கலன் கண்காணிப்பு கருவி பொருத்தப்படுகிறது. இது ஒன்றின் விலை ரூ.35 ஆயிரம் ஆகும். இதற்கு 40 சதவீதம் என ரூ.14 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள்

இத்திட்டத்தில் நாகை மாவட்டத்திற்கு பொது பிரிவில் 50 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விரும்பும் மீனவர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story