நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ராதாகிருஷ்ணன் (திட்ட ஒருங்கிணைப்பாளர்), பெரியார் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நிலக்கடலை சாகுபடி
நீடாமங்கலத்தில் வேளாண் அறிவியல் நிலையம் தமிழ்நாடு நீர் நிலவள திட்டம், உலகவங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நீர் நுட்ப மையம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வருகிறது. தற்போது வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்க உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விதைகள், உரங்கள், ஜிப்சம், நடமாடும் நீர் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
8 வட்டாரங்கள்
மானிய திட்டத்தில் பயன் பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நீடாமங்கலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கொரடாச்சேரி, திருவாரூர் ஆகிய 8 வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறலாம்.
இந்த திட்டம் வட்டாரத்தில் உள்ள பொதுப்பணித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டும் பொருந்தும். மற்ற கிராமங்களுக்கு பொருந்தாது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் பயன் பெற ஆதார் அட்டை நகல், சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், சிட்டா அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பாஸ்போட் அளவுள்ள 2 புகைப்படங்கள் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.