வட்டியை குறைத்து வழங்குதல்:வாடிக்கையாளருக்கு, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


வட்டியை குறைத்து வழங்குதல்:வாடிக்கையாளருக்கு, மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:46 PM GMT)

வட்டியை குறைத்து வழங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி, வாடிக்கையாளருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கடலூர்

கடலூர் பீச் ரோட்டை சேர்ந்தவர் சுதாகர். இவர் தனது மகள் சுப்ரஜா (வயது 21) பெயரில் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கற்பக விருட்ச திட்டத்தின் கீழ் கடந்த 11.8.1999 அன்று ரூ.9400-யை வைப்பீடு செய்தார். அந்த தொகை 20 ஆண்டு காலத்திற்கு வைப்பீடு செய்யப்பட்டு, அதற்கு 12 சதவீத வட்டியுடன் முதிர்வு தேதியான 11.8.2019 அன்று ரூ.1 லட்சத்து 24 முதிர்வு கிடைக்கும் என்று அறிந்து, அதில் சேர்ந்து பணத்தை கட்டினார். அதன்படி முதிர்வு தேதி முடிந்ததும் வாடிக்கையாளர் சுதாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரை அணுகி முதிர்வு தொகையை கேட்டார். அதற்கு அவர், பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இது பற்றி சுதாகர் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆணைய தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் பார்த்திபன், கலையரசி ஆகியோர் விசாரித்து வந்தனர். அப்போது, மேலாண்மை இயக்குனர், கடந்த 2003-ல் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்பேரில், மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை மேலாளர் சுற்றறிக்கையின் படி 12 சதவீத வட்டியை 7.25 சதவீத குறைக்கப்பட்டதாகவும், இது பற்றி வாடிக்கையாளருக்கு தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்று விசாரணையில் தெரிய வந்தது. இந்த சேவை குறைபாட்டிற்காக வைப்பீட்டு முதிர்வு தொகையான ரூ.1 லட்சத்து 24-யை 11.8.2019-ல் இருந்து தொகை செலுத்தப்படும் தேதி வரை 9 சதவீத வட்டியுடன் மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும். மேலும் சேவை குறைப்பாட்டின் காரணமாக வாடிக்கையாளருக்கு மன உளைச்சல், அலைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டனர்.


Next Story