பூக்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
பூக்கள், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பூக்கள், காய்கறிகள், பழமரக்கன்றுகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
காய்கறி சாகுபடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2023-24-ம் ஆண்டுக்கு தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள், காய்கறிகள் மற்றும் உதிரிப்பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் மற்றும் விவசாய கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 31 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மானியம்
மாவட்டத்தில் எலுமிச்சை சாகுபடிக்கு ஒரு எக்டேருக்கு ரூ.13 ஆயிரத்து 195-ம், மா சாகுபடிக்கு ரூ.6 ஆயிரத்து 120-ம், கொய்யாவுக்கு ரூ.9 ஆயிரத்து 201-ம், நெல்லிக்கு ரூ.9 ஆயிரத்து 601-ம், காய்கறிகளுக்குரூ.20 ஆயிரமும், மல்லிகைப்பூவுக்கு ரூ.16 ஆயிரமும், நிழல் வலை குடில் அமைக்க ரூ.355-ம், மாடித்தோட்ட தளை அமைக்க ரூ.450-ம், பழச்செடிகள் தளை அமைக்க ரூ.150-ம், வாழை சாகுபடியில் காய்கறி ஊடுபயிர் ரூ.10 ஆயிரமும், பல்லாண்டு பயிரில் காய்கறி ஊடுபயிர் ரூ.10 ஆயிரமும், காய்கறி கூடை ரூ.3 ஆயிரத்து 500-ம், காளான் வளர்ப்பு கூடம் ரூ.50 ஆயிரமும், அரசு கல்வி நிறுவனங்களில் தோட்டம் அமைத்தல் ரூ.8 ஆயிரமும், மிளகாய் தொகுப்பு அமைக்க, சீமை கருவேலமரங்களை அழிக்க ரூ.7 ஆயிரத்து 500-ம், மிளகாய் காய வைக்கும் தார்ப்பாய்க்கு ரூ.2 ஆயிரமும், முருங்கை ஏற்றுமதி மையம், அங்கக வேளாண்மை ரூ.4 ஆயிரமும், முருங்கை ஏற்றுமதி மையம், அங்ககசான்று பெறுதல் ரூ.3 ஆயிரமும், முருங்கை ஏற்றுமதி மையம் சிப்பம் கட்டும் அறை ரூ.2 லட்சமும் மானியம் வழங்கப்பட உள்ளது.
ஆவணங்கள்
எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன்கார்டு நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் TNHORTNET மற்றும் உழவன் என்ற இணைய தளத்திலும் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.