பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவர்களுக்கு மானியம்


பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவர்களுக்கு மானியம்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்


நாகை மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவர்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீனவர்களின் வாழ்வாதாரம்

தமிழ்நாட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும், உள்நாட்டு மீன் வளர்ப்பினை ஊக்குவித்திடவும், மீன் உற்பத்தியை பெருக்கிடவும் அரசு பல்வேறு வகைகளில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி நாகை மாவட்டத்தில் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைக்க மொத்த செலவினம் ரூ.7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதில் இருந்து மானியமாக பொது பிரிவினருக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரமும், ஆதி திராவிடர் பிரிவினருக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. பயோபிளாக் மீன் வளர்க்கும் குளங்கள் அமைக்க ரூ.7 லட்சத்து 50 நிர்ணயிக்கப்பட்டு, அதில் இருந்து மானியமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.3 லட்சமும், ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இறால் வளர்க்க

அதேபோல குளங்கள் அமைத்து இறால் வளர்க்க ரூ.18 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதில் மானியமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஐஸ்கட்டி தொழிற்சாலை அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு, அதில் மானியமாக பொது பிரிவினருக்கு ரூ.60 லட்சம் வரை வழங்கப்படும்.

10 மீட்டர் நிலத்துக்குட்பட்ட பைபர் படகு, எந்திரம், வலை மற்றும் குளிர்காப்பு பெட்டிகள் வாங்கிட ரூ.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு அதில் மானியமாக பொது பிரிவுகளுக்கு ரூ.2 லட்சமும், பெண்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களில் மானிய தொகை, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். மேலும் பெற விண்ணப்பங்களில் மூப்பு நிலை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூடுதல் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story