19-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. வெற்றி
காரிமங்கலம் ஒன்றியம் 19-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ந்தேதி நடந்தது. இதன்படி காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு, பாலக்கோடு ஒன்றியம் பேளாரஅள்ளி ஊராட்சி 8-வது வார்டு, மொரப்பூர் ஒன்றியம் மொரப்பூர் ஊராட்சி 4 மற்றும் 7-வது வார்டு என மொத்தம் 4 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நேற்று எண்ணப்பட்டன.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 19-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 3 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 5,251 ஓட்டுகள் பதிவானது. தி.மு.க. வேட்பாளர் சந்திரா மாதையன் 3,882 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் அசோக்குமார் 726 ஓட்டுகளும், பா.ம.க. வேட்பாளர் அருண்மூர்த்தி 553 ஓட்டுகளும் பெற்றனர். வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் சந்திரா மாதையனுக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம் பேளாரஅள்ளி கிராம ஊராட்சி 8-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு 2 பேர் போட்டியிட்டனர். இவர்களில் பிரகாஷ் 246 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மொரப்பூர் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 4 பேர் போட்டியிட்டனர். இவர்களில் இளங்கனி 170 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த ஊராட்சியில் 7-வது வார்டில் உறுப்பினர் பதவிக்கு 3 பேர் போட்டியிட்டனர். இவர்களில் நவீன் 112 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வழங்கினர்.