மாணவர்களுக்கான வெற்றிப்பாதை நிகழ்ச்சி
கடையநல்லூர் பள்ளியில் மாணவர்களுக்கான வெற்றிப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அச்சம்பட்டியில் உள்ள எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்குபெறும் மாணவர்களுக்கான வெற்றிப் பாதை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் அப்துல் காதர், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராமசுப்பு, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளிகள்) அலோசியஸ் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வரவேற்றார்.
கல்வி ஆலோசகர் அஸ்வின் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், போட்டித் தெருவில் கலந்து கொள்வது எப்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்விற்கு மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் எவ்வாறு தயார்படுத்த வேண்டும்? என்பது குறித்த பயனுள்ள தகவல்களை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ராஜேஸ்வரி நன்றி கூறினார்.