களத்தில் இறங்கி பணியாற்றினால்தான் வெற்றி உங்களை தேடி வரும்
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால்தான் வெற்றி உங்களை தேடி வரும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
கும்பகோணம்:
நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால்தான் வெற்றி உங்களை தேடி வரும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
பயிற்சி பாசறை மாநாடு
காங்கிரஸ் கட்சியின் சோழ மண்டல வட்டார, நகர நிர்வாகிகள் பயிற்சி பாசறை மாநாடு கும்பகோணத்தில் நேற்று நடந்தது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன் வரவேற்றார்.
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், கும்பகோணம் மேயர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பான வெற்றியை பெறும்
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் பேசும்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தென் மாநிலங்கள் முழுவதிலும் காங்கிரஸ் சிறப்பான வெற்றியை பெறும். இந்தியாவிலேயே பா.ஜ.க. என்ற கட்சியே இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம்.
பா.ஜ.க. வலுவான பகுதியாக கருதப்படும் கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு பகுதியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.
காவிரி நீர் பிரச்சினை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
காவிரி நீர் பிரச்சினையை தற்போது எதிர்க்கட்சிகள் கிளப்புகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் சட்ட முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று சொன்னோம்.
நாங்கள் கூட கர்நாடகா மாநில அமைச்சர்களிடம் காவிரி நீர் குறித்துப் பேசினோம். அப்போது அவர்கள், நாங்கள் தற்போது தண்ணீரை திறந்து விட்டால், கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்வார்கள் என்றனர்.
அதுபோல் கர்நாடகாவில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து முதலில் குரல் கொடுத்தது பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி பொம்மை. பிறகு எடியூரப்பா, குமாரசாமி எதிர்க்கின்றனர். ஆனால் இங்குள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, முருகன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாய் திறக்கவில்லை.
களத்தில் இறங்கி பணியாற்றினால்...
தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள், வெற்றி உங்களை தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எம்.எல்.ஏ., எம்.பி. ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால் நீங்கள் நினைப்பது நடக்கும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் தான் உள்ளது. தமிழகத்தில் கூட்டணி பலமாக உள்ளது. எனவே உங்கள் தெருவில் உள்ள கூட்டணி கட்சி வாக்குகளை சிதறாமல் கவனித்துக்கொள்ளுங்கள். வெற்றி நமக்குத்தான். கூட்டணிக் கட்சி பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ஏமாந்து விடுவீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுதியாக வெற்றி பெறுவோம்
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் பேசும்போது, கும்பகோணம் தொகுதி தி.மு.க. கோட்டை. தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் வெற்றி பெற வைப்போம். மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1967-ம் ஆண்டு தேர்தலின்போது காமராஜர் தோற்கடிக்கப்பட்டும் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தற்போது தி.மு.க. வசம் உள்ள இந்த தொகுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கட்சி மேலிடம் வாங்கி கொடுத்தால் உறுதியாக வெற்றி பெறுவோம் என்றார்.
கலந்து கொண்டோர்
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாணிக்கம் தாகூர் எம்.பி., காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின்பிரசாத், மாநிலக்குழு உறுப்பினர் ஓ.வி.கிருஷ்ணசாமி, திருவிடைமருதூர் தெற்கு வட்டார தலைவர் மணிகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஹிமாயூன் கபீர் மாவட்ட துணைத் தலைவர் அசோகன், திருவிடைமருதூர் ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், நிர்வாகிகள் செந்தில்குமார், குருசாமி, தங்க பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர தலைவர் மிர்சாவூதீன் நன்றி கூறினார்.