சென்னை விமான நிலையத்தில் டெல்லி விமானம் திடீர் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.05 மணிக்கு டெல்லிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 167 பயணிகள் சோதனைகளை முடித்து காத்து இருந்தனர். ஆனால் டெல்லி செல்லும் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
மதியம் 12 மணி வரையிலும் விமானம் புறப்பட்டு செல்லாததால் பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளிடம் கேட்டனர். அப்போது டெல்லி விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் வாக்குவாதம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், விமான நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து மாற்று விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல இருந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதையடுத்து அவசரமாக செல்ல வேண்டிய 60-க்கும் மேற்பட்ட பயணிகள் வேறு விமானங்களில் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். இல்லை என்றால் இரவு 9 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவர் என விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சில பயணிகள் பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். மேலும் சிலர் இரவு விமானத்தில் செல்வதாக கூறி விட்டு சென்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.