சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து


சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீர் ரத்து
x

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீரென ரத்தானதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் திடீரென ரத்தானதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சுப்பிரமணியர் தேர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுகளுக்கு பின்னர் இவ்விழா இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு மாட வீதியை சுற்றி சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 7-ம் நாள் விழாவன்று விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் நடைபெறும்.

2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற உள்ளதால் பஞ்சமூர்த்திகளின் தேர்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுப்பிரமணியர் தேர் மட்டும் ரூ.30 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர் பீடத்தின் மேல் பகுதியில் உள்ள அலங்கார கால்கள், மேல் அடுக்குகள் ஆகியவை முற்றிலுமாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

வெள்ளோட்டம் திடீர் ரத்து

புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் நேற்று நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக நேற்று முன்தினம் மாலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த தேரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த தேர் வெள்ளோட்டம் காண தயார் நிலையில் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய தேரின் வெள்ளோட்டம் திடீரென நேற்று காலை ரத்து செய்யப்பட்டது.

சுப்பிரமணியர் தேரின் வெள்ளோட்டம் காண திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பலர் திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் நிலையில் நின்று கொண்டிருந்த தேரை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் தேர் வெள்ளோட்டம் ரத்தான தகவலை ஆட்டோ மூலம் பிரசாரம் செய்தனர்.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்ட போது, புதுப்பிக்கப்பட்ட சுப்பிரமணியர் தேரின் உறுதி தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி சான்றிதழ் பெற்ற பிறகு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும் என்றார்.


Next Story