பிளாட்பாரம் அமைப்பதற்காக ரெயில்வே கேட் திடீர் மூடல்


பிளாட்பாரம் அமைப்பதற்காக ரெயில்வே கேட் திடீர் மூடல்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் பிளாட்பாரம் அமைப்பதற்காக ரெயில்வே கேட் திடீர் மூடப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி கிராமத்திற்கு செல்லும் ரெயில்வே கேட்டில் 2 ரெயில் பாதைகளுக்கும் இடையே சரியான பிளாட்பார வசதி இல்லாமல் மேடும், பள்ளமுமாக நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால் அந்த ரெயில்வே கேட்டை வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு கடந்து சென்றுவந்தனர். இரட்டை ரெயில் பாதை குறுக்கிடும் அந்த ரெயில்வே கேட் பகுதியில் நேற்று பிளாட்பாரம் அமைக்கும் பணி ரெயில்வே துறை சார்பில் நடைபெற்றது. இரட்டை ரெயில் பாதைக்கு இடையில் உள்ள பிளாட்பார பகுதிகளில் இரும்புக்கம்பிகளால் ஆன பிளாட்பாரம் அமைக்கும் பணி நேற்று மாலை தொடங்கி நடைபெற்றது. இதற்காக அங்குள்ள ரெயில்வே கேட் தற்காலிகமாக மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. அதன்படி ஜானகிபுரம் வழியாக கண்டமானடி, அரியலூர், சித்தாத்தூர், கொளத்தூர், சாலாமேடு, ரெட்டிப்பாளையம் பகுதிகளுக்குச்செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இவர்கள் நீண்ட தொலைவில் உள்ள சாலாமேடு ரெயில்வே கேட் பகுதிக்கு சென்று மீண்டும் மேற்கண்ட பகுதிகளுக்கு சென்றனர். இப்பணியை மேற்கொள்வது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இன்றி திடீரென ரெயில்வே கேட் மூடப்பட்டதால் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, இப்பணிகள் ஒரே நாளில் முடிக்கப்படும் என்றனர்.


Next Story