இரு தரப்பினர் இடையே திடீர் மோதல்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
2 பேர் காயம்
நாகர்கோவில் பள்ளிவிளை ரெயில் தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டு 2 தரப்பாக பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மதுபாட்டில்களை உடைத்தும் தாக்கியதால் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனே அங்கு சென்று வாலிபர்களை சமாதானப்படுத்தினர்.
இந்த மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியிலும் மோதல்
அப்போது அங்கேயும் இருதரப்பாக பிரிந்து அவர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 2 தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.