மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசித்த நடிகையின் படங்களால் திடீர் சர்ச்சை


மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசித்த நடிகையின் படங்களால் திடீர் சர்ச்சை
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை இருக்கும் நிலையில், சினிமா நடிகை கோவிலின் உள்ளே எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட படங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை இருக்கும் நிலையில், சினிமா நடிகை கோவிலின் உள்ளே எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட படங்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

செல்போனுக்கு தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பிறமாநில, வெளிநாட்டு பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கோவில் வளாகத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை 4 கோபுர வாசல் அருகே செயல்பட்டு வரும், பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து விட்டு, தரிசிக்க செல்கின்றனர்.

கோவில் பாதுகாப்பை காரணம் காட்டி சாதாரண பக்தர்களை போலீசார் கடுமையாக சோதிக்கின்றனர். ஆனால், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள் உள்ளிட்ட எவரையும் எந்தவித சோதனையும் செய்யாமல் கோவிலுக்குள் அனுப்பி வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

நடிகையால் சர்ச்சை

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சினிமா நடிகை சித்தி இட்னானி மதுரை வந்தார். இவர், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி ஆவார்.

அவர் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தியானம் செய்வது, சுவாமி சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கல்யாண சுந்தரேசுவரர் சன்னதியில் இருப்பது போன்ற படங்களை செல்போனில் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை, தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்த விவகாரம்தான் சர்ச்சையாக மாறி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நடிகையை செல்போனுடன் அனுமதித்தது ஏன்?, சாதாரண பக்தர் என்றால், இந்நேரம் நடவடிக்கை பாய்ந்திருக்கும் எனவும், சினிமா பிரபலங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லையா? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, மீனாட்சி அம்மன் கோவில் சாமி சன்னதி அர்த்தமண்டபத்திற்குள் ஆதீனம் ஒருவர் தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story