பிரசவத்தின்போது கர்ப்பிணி திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


பிரசவத்தின்போது கர்ப்பிணி திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 July 2022 5:12 PM IST (Updated: 7 July 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரவசத்தின்போது கர்ப்பிணி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்ப்பிணி சாவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். இவரது மனைவி சங்கரி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவரது வயிற்றில் இரட்டை குழந்தை இருந்துள்ளது. பிரசவ வலிகாரணமாக நேற்று காலை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.

அப்போது மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல், நர்சுகளே சங்கரிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரத்திலேயே சங்கரி உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கரியின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் ஒன்றுகூடி மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல் பணியில் இருந்த நர்சுகள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார் ஆகியோர் கர்ப்பிணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்‌. 3 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்பு, டாக்டர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, சங்கரியின் உடலை பெற்று சென்றனர்.


Next Story