வீடுகள் திடீர் இடிப்பு
பாளையங்கோட்டையில் 4 வீடுகள் திடீர் இடிப்பு
பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு மணிக்கூண்டு பகுதியில் சாந்திநகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள சில வீடுகள் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் அந்த வீடுகள் பகுதிக்கு வந்தனர். பின்னர் திடீரென்று 4 வீடுகளின் முகப்பு பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க தொடங்கினர்.
அப்போது வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு குழந்தைகளுடன் வெளியே ஓடி தப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீடுகளை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் மணப்படை மணி (வயது 45) பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.