ஈரோட்டில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை சாலைகள் குளங்களாக மாறின


ஈரோட்டில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை

ஈரோடு

ஈரோட்டில் நேற்று மாலை திடீரென கொட்டித்தீர்த்த கன மழையால் ரோடுகள் அனைத்தும் குளங்களாக மாறின.

தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாநகர் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் சுழற்காற்று வீசி கடும் சேதத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினம் மாலையும், பின்னர் இரவிலும் மழை பெய்தது. நேற்று முன்தினம் சூறைக்காற்று அச்சத்தை ஏற்படுத்தியது போன்று, நேற்று முன்தினம் கடுமையான மின்னல் மற்றும் இடி அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த மின்னல் காரணமாக சில பகுதிகளில் மின்னணு பொருட்கள் நாசமாயின.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. 2 நாட்கள் மழை பெய்ததற்கான தாக்கம் எதுவும் இன்றி வெப்பம் வாட்டியது. மதிய நேரத்தில் அவ்வப்போது திடீரென்று வானம் இருண்டாலும் உடனடியாக கலைந்து சென்றது.

ஈரோட்டில் கொட்டியது

ஆனால் மாலை 5 மணிக்கு மேல் திடீரென்று கருமேகங்கள் சூழ்ந்தன. சற்று நேரத்தில் சடசட என மழைத்துளிகள் விழத்தொடங்கின. தொடக்கத்தில் இருந்தே மழை வலுத்து கொட்டியது. காற்று இல்லாமல் மழை நின்று பெய்தது. பெரிய அளவில் இடி-மின்னல் அடிக்காமலும், மழையின் தாக்கம் மிக வேகமாக இருந்தது.

கடந்த 2 நாட்களாக ஈரோடு பஸ்நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரலாகவும், தூறலாகவும் இருந்த மழை, நேற்று வானத்தில் இருந்து அருவி கொட்டியது போன்று தண்ணீரை ஊற்றித்தள்ளியது.

சாலைகளில் வெள்ளம்

இதனால் மழை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஈரோட்டில் உள்ள அனைத்து சாலைகளும் காட்டாறாக மாறின. மழை வெள்ளம் சாலையின் இரு புறங்களையும் தொட்டுக்கொண்டு பாய்ந்தது. சாக்கடை கால்வாய்கள் நிரம்பி, சாலையில் ஓடின. சாலையில் பள்ளம் எது, சாக்கடை கால்வாய் எது என்று தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் தடுமாறினார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே சத்தி ரோடு, வீரபத்திரா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதி, சேட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலை குளம்போல மாறியது. சுமார் 45 நிமிடங்கள் மழை தீவிரமாக இருந்தது.

மழையால் வ.உ.சி.பூங்கா காய்கறி சந்தை குளமாக மாறியது. பள்ளமான அனைத்து இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீரப்பன் சத்திரம், சூளை, கனிராவுத்தர் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. பிச்சைக்காரன் பள்ளம் ஓடையிலும் மழை வெள்ளம் அதிகமாக சென்றது.

போக்குவரத்து பாதிப்பு

பெருந்துறை ரோடு குமலன்குட்டை பகுதியில் தண்ணீர் குளம்போல தேங்கியதால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது. காளைமாடு சிலை, ரெயில்நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் ரெயில்வே நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இங்கு மேம்பாலம் இல்லாததால் வாகனங்கள் நுழைவுபாலத்தை கடந்து செல்ல அதிக நேரம் எடுத்துக்கொண்டன. இதனால் இங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் பன்னீர்செல்வம் பூங்கா வரை எதிரொலித்தது.

கடை வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, குப்பைக்காடு, ராஜாஜி நகர், கே.என்.கே.ரோடு, திருநகர் காலனி என்று பல பகுதிகளிலும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

ரெயில் நிலையத்தின் முன்புறம்

ஈரோடு ரெயில் நிலையத்தின் முன்புறம் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் முன் பதிவு மையத்துக்குள் புகுந்த மழைநீர் குளம் போல தேங்கி நின்றது. இதனால் ரெயில் பயணச்சீட்டு வாங்க வந்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ரெயில் நிலையத்துக்குள் மழைநீர் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாநகராட்சி மூலம் சாக்கடை கால்வாய்கள் தூய்மை பணி நடந்ததால் அந்த பகுதிகளில் தண்ணீர் தடையின்றி பாய்ந்து சென்றது. ஆனால், அடைப்புகள் அகற்றாத பல இடங்களிலும் கழிவு நீர் மழை நீருடன் கலந்து குடியிருப்புகள், சாலைகளில் பாய்ந்து ஓடியது.

45 நிமிடம் மழை பெய்தாலும் சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே மழை வலுத்து பெய்தது. ஆனால் இந்த மழைக்கே வடிகால் வசதி இல்லாத நகரம்போல, ஈரோடு வெள்ளக்காடாக மாறியது குறிப்பிடத்தக்கது.


Next Story