அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்,
குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
வெடி விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காட்டில் வெடி மருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த தொழிற்சாலை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டு உள்ளது.
தொழிற்சாலையில் வெடிபொருட்கள் உற்பத்தி செய்வதற்காக பல்வேறு பிரிவுகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று தொழிற்சாலையின் சிடி பிரிவில் 747-வது கட்டிடத்தில் வழக்கம்போல் பணி நடைபெற்றது. அங்கு 3 பெண்கள் உள்பட 8 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 8.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
8 பேர் படுகாயம்
உடனடியாக தொழிற்சாலையின் பாதுகாப்பு பிரிவினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 8 பேரை மீட்டனர்.
இதில் ஜெயபிரகாஷ் (வயது 56), வேணுகோபால் ஆகிய 2 பேர் மேல்சிகிச்சைக்காக வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. செபாஸ்டியன், தேவா, ரமேஷ் ஆகிய 3 ஊழியர்களுக்கு காது கேளாமல் போனது. அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பெண் ஊழியர்களான மகாலட்சுமி, தீபா, ராதிகா ஆகியோருக்கும் வெடி சத்தத்தால் பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் 3 பேரும் தொழிற்சாலை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பணி நிறுத்தம்
இந்த விபத்து குறித்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை துணை பொது மேலாளர் டி.சங்கர் கூறியதாவது:-
இன்று(அதாவது நேற்று) காலை 8.30 மணியளவில் தொழிற்சாலையின் கார்டைட் டிவிசன் பிரிவில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. மீட்பு குழுவினர் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் வெடிபொருட்கள் உள்ள குழாயில் குறிப்பிட்ட இடத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வெடி விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று தெரிகிறது. விபத்து நடந்த பிரிவில் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. மற்ற பிரிவுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு தொழில்நுட்பம் முறையாக கையாளப்பட்டதால் பெரிய விபத்து ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.