சேலத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் 'திடீர்' தீ


சேலத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் திடீர் தீ
x

சேலத்தில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

சேலம்

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் 2-வது மாடியில் இருந்து நேற்று காலை கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் அங்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அங்கு தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 2-வது மாடியில் இருந்த சில எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் காலி அட்டைகள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story