மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் திடீர் தீ - மோட்டார் சைக்கிள்கள் சேதம்


மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் திடீர் தீ - மோட்டார் சைக்கிள்கள் சேதம்
x

மதுரை ரெயில் நிலைய வாகன காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிள்கள் சேதமாகின.

மதுரை


மதுரை ரெயில் நிலைய முன்பதிவு மைய வளாகத்தின் அருகே இருசக்கர வாகன காப்பகம் செயல்படுகிறது. இதற்கிடையே நேற்று மதியம் இருசக்கர வாகன காப்பகத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதனால் அங்கிருந்த ஊழியர்கள் சுதாரித்து வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல வாகன காப்பகத்துக்கு அருகே உள்ள கட்டிடங்கள் மதுரை ரெயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இடிக்கும் பணிகளும் நடந்து கொண்டிருந்தன. அந்த பணியாளர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 8 மோட்டார் சைக்கிள்கள், 10 சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மதுரை கோட்ட ரெயில்வே உதவி வர்த்தக மேலாளர் பாலமுருகன், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சுபாஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக வாகன காப்பகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த வாகனங்கள் கடும் வெயில் காரணமாக தீப்பற்றி எரிந்திருக்கலாம் என தெரியவந்தது. வாகன காப்பக வளாகத்தை இன்னும் ஓரிரு தினங்களில் இடிப்பதற்கான நடவடிக்கை தொடங்க இருக்கும் நிலையில் நடந்த இந்த தீவிபத்து ரெயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story