எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்


எண்ணெய் கிடங்கில் திடீர் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்
x

மதுரவாயலில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரவாயல்,

மதுரவாயல் அடுத்த வானகரம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் கிடங்கு உள்ளது. இங்கு பேரல்களில் ரசாயன எண்ணெய்கள் நிரப்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று திடீரென இந்த கிடங்கில் இருந்த பேரல்கள் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த நிலையில் தீயானது அருகில் இருந்த மற்ற பேரல்களுக்கு பரவிய நிலையில் தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மதுரவாயல், பூந்தமல்லி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்போது தீயணைப்பு வீரர் ஒருவருக்கு தீ காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிசிச்சை பெற்று வருகிறார்.

பேரல்கள் வெடித்தது

தீயை அணைக்கும் போது ரசாயன எண்ணெய் வைக்கப்பட்டிருந்த சில பேரல்கள் திடீரென வெடித்து சிதறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள மற்ற கம்பெனிகளுக்கு பரவாமல் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த எண்ணெய் கிடங்கு அமைக்க உரிய அனுமதி உள்ளதா? போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story