பரமத்திவேலூரில்குப்பையில் திடீர் 'தீ'


பரமத்திவேலூரில்குப்பையில் திடீர் தீ
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள செயல்படாத பொதுக் கழிப்பிடத்திற்கு முன்பு குப்பைகள் கழிவுபொருட்களை அப்பகுதியில் கொண்டுவந்து கொட்டப்பட்டு வருகிறது. வேலூர் பேரூராட்சி நிர்வாகம் பழைய பைபாஸ் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அதிக அளவில் குப்பைகளை சேகரித்து வைத்து தீ வைத்தனர். அப்போது காற்றின் வேகத்தால் தீ மள மள என எரிய தொடங்கியது. மேலும் கரும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டம் போல் ஆனது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளும், தூய்மை பணியாளர்களும் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை அணைக்க முடியாததால் கரூர் மாவட்டம் புகலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் 20 நிமிடத்திற்கு மேலாக போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இங்கே குப்பைகள் கொட்டி தீ வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story