என்.எல்.சி. சுரங்கத்தில் திடீர் தீ விபத்துகாயமடைந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மந்தாரக்குப்பம்,
நெய்வேலி அருகே உள்ள கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் செல்வதுரை(வயது 37). இவர் நெய்வேலி என்.எல்.சி.யில் 1-வது நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர் முதற்கட்ட பணிக்கு சென்றிருந்தார். அப்போது, சுரங்கப்பகுதியில் உள்ள பவர் ஸ்டேஷனில் செல்வதுரை வேலை செய்து கொண்டிருந்தார். இந்த நிைலயில் திடீரென, அங்கு மின்கசிவு ஏற்பட்டு மின்சாதனங்கள்(பேனல்போர்டுகள்) வெடித்து சிதறி தீப்பற்றியது.
தீவிர சிகிச்சை
இதில் செல்வதுரை தீக்காயம் அடைந்தார். உடன் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலி என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னா், அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் பரபரப்பு நிலவியது.