மதுரையில் திடீர் ஆய்வால் ருசிகரம்: மதுபிரியர் போல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்கிய மேலாண்மை இயக்குனர் கூடுதல் விலைக்கு விற்ற 6 பேர் பணியிடை நீக்கம்


மதுரையில் திடீர் ஆய்வால் ருசிகரம்: மதுபிரியர் போல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்கிய மேலாண்மை இயக்குனர்  கூடுதல் விலைக்கு விற்ற 6 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 9 Sept 2023 1:15 AM IST (Updated: 9 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் விசாகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை


கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் பணியாளர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் விசாகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நேரடி ஆய்வு

தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் விசாகன், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடக்கும் ஆய்வு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் அரசினர் விருந்தினர் மாளிக்கைக்கு செல்லாமல், நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

விமான நிலையத்தில் இருந்து அவர் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் மதுபிரியர் போல் சென்று மதுபாட்டில்களை வாங்கினார். அப்போது சில கடைகளில் அவரிடம் இருந்து ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலித்தனர். மொத்தம் அவர் 11 கடைகளில் சென்று ஆய்வு செய்தார்.

அதில் 6 கடைகளில் அவரிடம் கூடுதல் தொகை வசூலித்தனர். அந்த கடைகளின் விற்பனையாளர்களான சின்னச்சாமி, ஜோதிராமலிங்கம், வெங்கடேஷ், காமேஸ்வரம், கண்ணன், மார்நாடு ஆகிய 6 பேரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். உடனடியாக அவர்கள் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும் விசாகன் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு, விலை பட்டியல் குறித்தும் ஆய்வு செய்தார்.

ரூ.10 கூடுதல் வசூலிப்பு

இதுகுறித்து மாநில வாணிபக்கழகம் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மேலாண்மை இயக்குனர் விசாகன், மதுரை மண்டலத்திற்குட்பட்ட கடைகளில் ஆய்வு செய்த போது 6 கடைகளில் நிர்ணயித்த விலையை விட, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக தலா ரூ.10 வசூலித்த 6 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story