பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலையில் திடீர் பள்ளம்


பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலையில் திடீர் பள்ளம்
x

வேலூர் காகிதப்பட்டறையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலையை சரியாக நிரப்பாததால் திடீர் பள்ளம் ஏற்பட்டு, அதன் கீழ்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது.

வேலூர்

வேலூர் காகிதப்பட்டறையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய சாலையை சரியாக நிரப்பாததால் திடீர் பள்ளம் ஏற்பட்டு, அதன் கீழ்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது.

பாதாள சாக்கடை பணிகள்

வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டை முருகன் கோவில் தொடங்கி கலெக்டர் அலுவலகம் அருகே வரையிலான பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக காகிதப்பட்டறை வழியாக செல்லும் ஆற்காடு சாலையின் ஒருபகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சிமெண்டு தொட்டிகள் வைக்கப்பட்டு, அவற்றுடன் ராட்சத குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீராக சமப்படுத்தபடவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காகிதப்பட்டறை பஸ்நிறுத்தம் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் முன்பாக புதிதாக போடப்பட்ட தார்சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது.

இது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பாதாள சாக்கடை மெயின் குழாய் இணைப்பிற்காக தார்சாலையில் பள்ளம் தோண்டி இணைப்பு கொடுத்ததாக கூறப்பட்டது.

சாலையில் திடீர் பள்ளம்

இந்த நிலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டி மண்ணால் நிரப்பப்பட்ட தார்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் சென்றதால் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டது.

மேலும் அதன் கீழே சென்ற மாநகராட்சி குடிநீர் குழாயும் உடைந்து அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணானது. அதிர்ஷடவசமாக எந்த வாகனமும் அந்த பள்ளத்தில் சிக்கி கொள்ளவில்லை.

பாதாள சாக்கடை பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தார்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அதனை மீண்டும் சரியாக நிரப்பாமல், பெயரளவில் மண்ணை போட்டு நிரம்பி உள்ளனர்.

அதனால் தான் சாலையில் பள்ளம் விழுந்துள்ளது என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.

அந்த பகுதியை மீண்டும் சரியாக நிரப்ப வேண்டும். அதனை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story