மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பொதுமக்கள் திடீர் போராட்டம்
கந்திலி அருகே உள்ள கும்மிடிகாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கந்திலி அருகே உள்ள கும்மிடிகாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்நிலைப்பள்ளி
கந்திலி அருகே கும்மிடிகாம்பட்டி ஊராட்சியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளியும் இதே பள்ளிக்கு சற்று தொலைவில் நார்சாம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உயர்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 230 பேர் படித்து வருகிறார்கள்.
நார்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனாவின் கணவர் சீனிவாசன், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனராக உள்ளார்.
இவர் கும்மிடிகாம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை சந்தித்து ''தொழில் வரி இனி நார்சம்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் மூலம் வசூல் செய்யப்படும். இங்கு தான் கட்ட வேண்டும். மேலும் பள்ளி கல்வி குழு தலைவர் உள்பட அனைத்தும் நார்சம்பட்டி ஊராட்சி மூலம் செயல்படுவார்கள்'' என கூறியதாக தெரிகிறது.
இந்த தகவலை அறிந்த கும்மிடிகாம்பட்டி ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் கும்மிடிகாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பாமல் கும்மிடிகாம்பட்டி அருகே விநாயகர் கோவிலில் தங்க வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, பிரபாவதி மற்றும் கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய ஊர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தரம் உயர்த்தப்பட்டது
அப்போது ஊர் பொதுமக்கள் கூறியதாவது;-
கடந்த 35 ஆண்டுகளாக கும்மிடிகாம்பட்டியில் அரசு ஆரம்பப் பள்ளியாக இருந்தது எங்கள் முயற்சியால் தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது பின்னர் ஊர் அருகே உள்ள இடத்தில் உயர்நிலைப்பள்ளி குடிசையில் தொடங்கி தற்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
பள்ளி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கும்மிடிகாம்பட்டி ஊராட்சியில் தான் தொழில் வரி கட்டி வருகிறோம். தற்போது கோர்ட்டு உத்தரவு எனக்கூறி தொழில்வரி மற்றும் நிர்வாகத்தில் நார்சாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் செயல்படுகிறார்.
அவரது செயலை கண்டித்து நாங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளிக்கு அனுப்புங்கள்
அதற்கு பதிலளித்த வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ''இந்த பிரச்சினை குறித்து நீங்கள் ஊராட்சி சார்பில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் திட்ட அலுவலரிடம் மனு அளியுங்கள். இப்போது பிள்ளைகளை உடனடியாக பள்ளிக்கு அனுப்புங்கள்'' என கூறினர். அதன்பேரில் நேற்று மதியம் 2 மணி அளவில் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பினார்கள்.
காலையில் கும்மிடிகாம்பட்டி மாணவர்கள் பள்ளிக்கு வராததால் நார்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த 7 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர். அவர்களை வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.
இரு ஊராட்சிகளில் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவ மாணவிகள் கல்வி கற்காத சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக அரசு தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது.